இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- “தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை செலுத்தி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்காது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அரசின் மற்ற துறைகளில் பணிபுரியும் பகுதிநேர மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் அனைவரும் பொங்கல் போனஸ் பெறும்போது, பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்குவது தான் நியாயமானது.
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து பொங்கல் போனஸ் வழங்குவதுடன் அவர்களது நீண்டகால கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.