காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த சில நாள்களுக்கு முன்பு, ராஜஸ்தானில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில், “ஆர்.எஸ்.எஸ்-ஸில் நீங்கள் ஒரு பெண்ணைக் காணமுடியாது. பெண்களை அவர்கள் அடக்குகிறார்கள். அதோடு பெண்களை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினரை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறீர்கள். ஆனால், ஏன் ஜெய் சீதா ராம் என்று சொல்லவில்லை… சீதாவை ஏன் நீக்கினீர்கள்… இந்தியப் பெண்களை ஏன் இழிவு படுத்துகிறீர்கள்” என விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் மற்றொரு காங்கிரஸ் தலைவரான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பாஜக-வினர் மக்களைத் தூண்டிவிட்டு `ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூறி அச்சத்தை விதைப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய அசோக் கெலாட், “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக நாடகமாடுகிறது. அவர்கள்(பா.ஜ.க) ஏன் ஜெய் சீதா ராம் என்று கூறவில்லை என ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார். இந்த முழு நாடும் சீதா மாதாவை மதிக்கிறது. ஆனால், அவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறி அச்சத்தையும், கோபத்தையும் விதைக்கின்றனர். ராமரையும் சீதா தேவியையும் அவர்கள் பிரித்தனர்” என பா.ஜ.க-வை விமர்சித்தார்.