துபாய்: துபாயில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் உள்ள ஒரு நகைக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாத சம்பளம் 3,200 திர்ஹாம்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,968). இந்நிலையில் துபாயில் நடைபெறும் லாட்டரி விற்பனையின்போது 2 பரிசுச் சீட்டுகளை அஜய் ஓகுலா வாங்கியிருந்தார்.
துபாய் நகரில் லாட்டரிச் சீட்டு விற்பனை வெகு பிரபலம். துபாயில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிக அளவில் லாட்டரிச் சீட்டுகளை வாங்குகின்றனர். துபாயில்கடந்த மாதம் நடந்த லாட்டரி குலுக்கலில் தமிழர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.67 கோடி கிடைத்தது.
இந்நிலையில் அஜய் ஓகுலாவுக்கு லாட்டரியில் ஜாக்பாட் பரிசாக ரூ.33 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதுதொடர்பாக துபாயிலிருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அஜய் ஓகுலா கூறியதாவது: எனக்கு லாட்டரி மூலம் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். என்னால் இதுவரை இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை.
பெற்றோர் நம்பவில்லை: எனக்கு பரிசு விழுந்த செய்தியை எனது சொந்த ஊரில் உள்ள அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் கூறிய போது அவர்களும் முதலில் நம்பவில்லை. பரிசு விழுந்த செய்தி தற்போது புகைப்படங்களுடன் ஊடகங்களில் செய்தியாகவே வெளியாகியுள்ளது என்பதால் அவர்கள் நம்பியிருக்கின்றனர்.
இந்தப் பணத்தைக் கொண்டு எனது அறக்கட்டளை பணிகளைத் தொடருவேன். இதன்மூலம் உதவி தேவைப்படும் என்னுடைய சொந்த கிராம மக்களுக்கும், அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கும் உதவி செய்வேன். இவ்வாறு அஜய் ஓகுலாகூறினார்..