போலீசார் துப்பாக்கியை உபயோகிக்க தயங்க கூடாது… அறிவுறுத்தும் டிஜிபி சைலந்திரபாபு!

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும், ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் நேற்று (டிச. 24) திறந்து வைத்தார். 

தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகங்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு,”தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

அதன்படி நெல்லை சரகம் மற்றும் திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் நகர்ப்புற பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள 69 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் செயின் பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை தடுக்க மற்றும் கண்காணிக்க காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 

கஞ்சா ஒழிப்பு

இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 23 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9 ஆயிரத்து 207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 ஆயிரத்து 635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் 4 ஆயிரத்து 3 நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 384 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி சரக மற்றும் திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கஞ்சா நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3967 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாதிய மோதல்களை தடுக்க…

திருநெல்வேலி சரக பகுதியில் ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளை தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளோம். முதல் அடுக்கில் காவல் நிலைய அளவில் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் இரண்டாம் அடுக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையாளர்கள் தலைமையிலான கண்காணிப்பு பணி நடைபெறும்.

அதேபோல் மூன்றாவது அடுக்கில் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள இந்த திட்டத்தின் மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது குற்றவாளிகளால் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் செல்லும்போது போலீசாரை குற்றவாளிகள் தாக்கும் சூழல் ஏற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூலிப்படைக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்டு சிறப்பு படை உருவாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.