சென்னை: மருத்துவம் தொடர்பான படிப்புகள் தமிழில் இருந்தால், மாணவர்கள் உயர் ஆராய்ச்சி வரை எளிதாக மேற்கொள்ளலாம் என்று, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ளபல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கூட்டரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை தாங்கிய ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, ஆராய்ச்சி படிப்பு முடித்த 41 பேருக்கு பட்டங்களை வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ‘வருமுன் காப்போம்’ என்பதே இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட ஆயஷ் மருத்துவ முறைகளை நாம் சரியாக கையாள வேண்டும்.
கடந்த 2014-2022 காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு 24.6 பில்லியன் டாலர் அளவுக்கு மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது, 103 சதவீதம் அதிகம்.
ஆண்டுதோறும் மருத்துவ சுற்றுலா மூலமாக, 78 நாடுகளில் இருந்து 20 லட்சம் பேர் இந்தியாவுக்கு வருகின்றனர்.
கரோனா பேரிடர் காலத்தில் மருத்துவத் துறையினர் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கது. அதேநேரம், அதிக பணம் செலுத்துமாறு நோயாளிகளை ஒருசில தனியார் மருத்துவமனைகள் நிர்பந்தம் செய்ததும், அவர்களிடம் பலமடங்கு அதிக கட்டணம் வசூலித்ததும் வேதனை அளித்தது. மருத்துவப் படிப்பை முடிப்பவர்கள் சமூகப் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.
மருத்துவம் தொடர்பான படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும். அதற்காக, ஆங்கிலம் வேண்டாம் என கூறவில்லை. மருத்துவப் பாடங்களை தமிழில் நடத்தினால் மாணவர்கள் உயர் ஆராய்ச்சி வரை எளிதாக மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம், துணை படிப்புகள் என 29,620 பேர் பட்டம் பெறுகின்றனர். நேரடியாக வழங்கப்பட்ட 41 பேர் தவிர, மற்றவர்களுக்கு கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
12-வது பட்டம் பெற்ற பெண்: பட்டமளிப்பு விழாவில் நீலா (49) என்ற பெண், நர்ஸிங் படிப்பில் ‘ஹீமோடயலிசிஸ்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார். பிஎஸ்சி, எம்எஸ்சி நர்ஸிங், எம்.ஏ. சமூகநல நிர்வாகம், எம்பிஏ என தொடர்ந்து படித்த நீலா தற்போது பெற்றிருப்பது 12-வது பட்டம். ஏழை குடும்பத்தில் பிறந்த நீலா தொடர்ந்து படிக்க அவரது தந்தை வழிகாட்டி, ஊக்கப்படுத்தி வந்துள்ளார். பின்னர், தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் காதல் கணவர் ஷேக் காதரும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இதை மேடையில் அமைச்சர் நிர்மலாவிடம் நீலா தெரிவிக்க, அவரையும் கணவரையும் நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.
முன்னதாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.