சென்னை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா நகரில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, வேலைக்கு முயற்சித்துள்ளார்.
அப்போது, அந்நிறுவன உரிமையாளரான ரத்னேஸ்வரன், லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக ஆறுமுகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆறுமுகம் தவணை முறையில் ரூ.12.25 லட்சம் வரை ரத்னேஸ்வரனுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் ரத்னேஸ்வரன் வேலை வாங்கிக் கொடுக்காமல், மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆறுமுகம், இது குறித்து 2018-ல்அண்ணா நகர் காவல் நிலையத்தில் ரத்னேஸ்வரன் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அண்ணா நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த ஆறுமுகம், சமீபத்தில் முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து, அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் ஆறுமுகத்தை செல்போனில் தொடர்புகொண்டு, “உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, முதல்வரின் தனிப் பிரிவில் நீங்கள் மனு அளித்துள்ளதால், விரைவாக விசாரணை நடத்த முடியாமல் போகிறது. எனவே, உடனடியாக அந்த மனுவை வாபஸ் பெற்று விட்டதாக எழுதிக் கொடுங்கள்” என்று கூறுகிறார்.
மறுமுனையில் பேசிய ஆறுமுகம், “முதல்வரின் தனிப் பிரிவில் மனு கொடுத்ததால்தான் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மனுவை வாபஸ் பெற்றால், மீண்டும் புகார் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது” என்கிறார்.
இதற்கு பதில் அளித்த காவலர், “முதல்வரின் தனிப் பிரிவில் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றால்தான், உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் கிடப்பில் போடப்படும்” என்று மிரட்டும் தொனியில் தெரிவிக்கிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.