வங்கிக் கணக்கு காப்பீடு திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்… நிதி ஆயோக் அறிவிப்பு!

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் மூலம் கடந்த 2018-ல் நம் நாட்டின் பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும் அடக்கம்.

நிதி ஆயோக் அமைப்பின்‌ அறிக்கையின்படி பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றும் விதமாக, 2018 ஜனவரி மாதம் முன்னேற விழையும் மாவட்டத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

நரேந்திர மோடி

அதனடிப்படையில் கல்வி, வேளாண்மை மற்றும் நீர்வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி, தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகிய இனங்களில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒருபகுதியாக, வங்கிக் கணக்கு தொடங்கி காப்பீட்டு திட்டத்தில் அதிகம் பதிவு செய்துள்ள மாவட்டங்கள் பட்டியலில் விருதுநகர் முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா மற்றும் அடல் பென்சன் ஆகிய திட்டங்களை 111 கிராமங்களில் 68 வங்கிக் கிளைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதில் 21 வங்கிகள் 100% சதவீத இலக்கை எட்டிப்பிடித்துள்ளன.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

விருதுநகர் மாவட்டத்தில் 111 கிராமங்களில் உள்ள அனைத்து தகுதியான நபர்களுக்கும் வங்கிக்கணக்கின் மூலம் மத்திய அரசின் ஏதாவது ஒரு காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதாவது, நடப்பு நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த 111 கிராமங்களும் 100 சதவிகிதம் நிதி மற்றும் சமூக பாதுகாப்பில் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர்வள ஆதாரங்கள், நிதிச் சேவைகள் மற்றும் திறன் மேம்பாடு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின்வசதி தனிநபர் இல்லக்கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாக கொண்டு மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட காரணிகளைக் கொண்டு முன்னேற விழையும் மாவட்டங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மாதம் ஒருமுறை தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

விருதுநகர்

இதில் நிதி உள்ளடக்கம் மே 2022 மாதத்திற்கான தரவரிசை பட்டியியலில் 112 மாவட்டங்களில் விருதுநகர் முதலிடத்தை பிடித்தற்காகவும், கடந்த 2021-2022 ம் நிதியாண்டில் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கான கடன் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அளவில் முதலிடத்தை பிடித்ததற்காகவும் பிரதமர் நரேந்திரமோடியால், விருதுநகர் மாவட்டத்திற்கு அண்மையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு தலா 13 வங்கி கிளைகள் இருப்பதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. இதனை 15 ஆக உயர்த்த வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள், தெருவோர வியாபாரிகளுக்கான திட்டம், பிணையம் இன்றி வங்கிகளில் கடன் பெறுவதற்கான திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.