திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் எஸ்.பாரைப்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், முகேஷ் என்ற 10 வயது மகனும் இருக்கின்றனர்.
முகேஷ் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து, தற்போது திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், அவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை தொடர்ந்து சிறுவனுக்கு மில்சர் காப்பர் எனும் மர்ம நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, சிறுவனின் கல்லீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ரத்த சுத்திகரிப்பு செய்தால்தான் சரியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதன்பின்னும் சிறுவனின் உடல் தேறவில்லை. இதனை தொடர்ந்து சிறுவன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான், அங்கு சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், ஏழைகளாக இருக்கும் அந்த தம்பதிகளுக்கு சிறுவனின் சிகிச்சைக்கு செலவு செய்ய பணம் கிடைக்காமல் இருக்கிறது. இதுவரை 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் நோயின் தாக்கம் குறையவில்லை. எனவே, குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்து விட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். சிறுவனின் சிகிச்சைக்கு உதவுமாறு அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.