விவாகரத்தான பெண்களே டார்கெட்; திருமண ஆசைக் காட்டி 20 பெண்களிடம் மோசடி- கல்யாண மன்னன் கார்த்திக் கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வசிப்பவர் சோ்ந்தவர் பிரேமா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்ட நிலையில், சாத்தூர் அருகே தன்னுடைய தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தன்னுடைய தாயாரின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது திருமணத்துக்கு மாப்பிள்ளை கேட்டு திருமணத் தகவல் மையத்தில் பிரேமா பதிவுசெய்துள்ளார்.

இரண்டாவது திருமணத்திற்காக திருமணத் தகவல் மையத்தில் பதிவுசெய்த ஒரு சில நாள்களிலேயே ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த காா்த்திக் ஆரோக்கியராஜ் (26) என்பவர் பிரேமாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, “நான் தனியார் வங்கியில் ஊழியராகப் பணி செய்கிறேன். என்னுடைய முதல் மனைவியுடன் விவாகரத்தாகிவிட்டதால், உங்களை இரண்டாவதாக திருமணம் செய்ய விரும்புகிறேன்” என கார்த்திக் ஆரோக்கியராஜ் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பிரேமாவும், காா்த்திக் ஆரோக்கியராஜிடம் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், பிரேமாவை சந்திப்பதற்காக விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் ஆரோக்கியராஜ் நேரில் வந்துள்ளார். அப்போது, திருமணத்திற்கு தாலிச்செயின் வாங்கி வந்திருப்பதாகக் கூறி பிரேமாவிடம் செயின் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார். இதனால் பூரித்துப்போன பிரேமா, அவரை அமரவைத்து உபசரித்துள்ளார். பின்னர், பிரேமாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கநகைக்கு டாலர் போட்டுத்தருவதாகக் கூறி அதனை கார்த்திக் ஆரோக்கியராஜ் கழற்றிக்கேட்டுள்ளார்.

கார்த்திக் ஆரோக்கியராஜ்

பிரேமாவும் தான் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை கழற்றி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிரேமா, வெளியே சென்று கார்த்திக் ஆரோக்கியராஜை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் கார்த்திக் ஆரோக்கியராஜ் கொடுத்த செயினை சோதித்துப் பார்த்தபோது அந்த நகை போலியானது என தெரியவந்துள்ளது. இதையடுத்தே தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரேமா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், காா்த்திக் ஆரோக்கியராஜ் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற மோசடி வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளா் நம்பிராஜன், உதவி ஆய்வாளா் சையது இப்ராஹிம் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி மன்னன் காா்த்திக் ஆரோக்கியராஜை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் காா்த்திக் ஆரோக்கியராஜை சுற்றிவளைத்து கைதுசெய்தனர். இதையடுத்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் குறித்த தகவல்களை திருமணப் பதிவு மையத்திலிருந்து பெற்று சம்பந்தப்பட்ட பெண்களிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நகை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் காா்த்திக் ஆரோக்கியராஜ் விருதுநகர் மட்டுமன்றி விழுப்புரம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி சுமார் 100 பவுன் தங்கநகைகளுக்கும் மேல் மோசடி செய்துள்ளார் என்பதும், கோவை மாவட்டத்தில் மட்டும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

கைதுசெய்யப்பட்ட காா்த்திக் ஆரோக்கியராஜிடமிருந்து பிரேமாவின் 5 பவுன் தங்கநகைகளை மட்டும் போலீஸார் மீட்டனர். இதைத் தொடர்ந்து கார்த்திக் ஆரோக்கியராஜை, நிதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிபதியின் உத்தரவின்பேரில் அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திக் ஆரோக்கியராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இந்த வழக்கில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.