1,000 மி.மீ பருவமழை… சென்னையில் இன்று ஹாட்ரிக் சான்ஸ்- வெதர்மேன் பரபர தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இறுதி கட்டத்தை எட்டி கொண்டிருக்கிறது. நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி சென்னையில் நடப்பு பருவமழை காலத்தில் 935 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 1,034 மில்லிமீட்டர் மழையும், 2021ல் 1,485 மில்லிமீட்டர் மழையும் பெய்திருக்கிறது. எனவே நடப்பாண்டும் ஆயிரம் மில்லிமீட்டர் மழைப்பொழிவை தாண்டினால் ஹாட்ரிக் வாய்ப்பாக மாறிவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஹாட்ரிக் சாதனை

இத்தகைய ஹாட்ரிக் வாய்ப்பு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தவறவிட்டு வருவதை புள்ளிவிவரங்கள் மூலம் பார்க்க முடிகிறது. அதாவது, 1817, 1818, 1819 ஆகிய மூன்று ஆண்டுகளில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பிறகு 7 முறை ஹாட்ரிக் வாய்ப்பிற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மூன்றாவது தடவை குறைவான மழை பெய்து ஏமாற்றம் அளித்துள்ளது. கடைசியாக 1996, 1997, 1998 ஆகிய ஆண்டுகளில் முறையே 1264 மில்லிமீட்டர், 1571 மில்லிமீட்டர், 721 மில்லிமீட்டர் மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை காலம்

இதில் 1998ஆம் ஆண்டு 279 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டு ஹாட்ரிக் வாய்ப்பு மிஸ்ஸானது. இம்முறை அதிக வாய்ப்பிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இன்று காலை 4 மணி நிலவரப்படி சென்னையில் வடகிழக்கு பருவமழையின் அளவு 945 மில்லிமீட்டர் அளவாக காணப்படுகிறது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் மழை

2001ஆம் ஆண்டிற்கு பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வட தமிழகம் நல்ல மழைப்பொழிவை காணும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் 2003ஆம் ஆண்டிலும் மழை பெய்தது. ஆனால் ஆங்காங்கே சுமாரான மழையை அளித்து ஏமாற்றிவிட்டது. எனவே இன்றைய தினம் புதிய வரலாறு படைப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதை பார்க்க முடிகிறது. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கடலோரப் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டாவில் பார்த்த மழையை வேலூரில் பார்க்க முடிவதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

வானிலை முன்னெச்சரிக்கை

இந்நிலையில் இன்று அதிகாலை வேளையிலேயே சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இன்று (டிசம்பர் 25) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.