சென்னை: தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை சுமார் 8 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டிருந்த நிலையில், அது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கரையைக் கடக்கலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் முன்னறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தற்போது வெளியான வானிலை நிலவர அறிக்கையில் சென்னை பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரம் கனமழை பெய்யக்கூடும்.