அடைமழை காரணமாக மத்திய மாகாணத்தில் உருவான இடர்நிலையைத் தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரட்ன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட சகல அரச திணைக்களங்களுடனும் இணைந்து, மீட்பு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக திரு. ராஜரட்ன தெரிவித்தார்.
இடர்காப்பு முகாமைத்து நிலையம் இன்று காலை விடுத்த புள்ளிவிபரங்களுக்கு அமைவாக கண்டி, மாத்தளை மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
கண்டி மாவட்டத்தில் இரு மரணங்கள் சம்பவித்தன. மத்திய மாகாணம் முழுவதிலும் 375 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது தவிர, பாலங்கள் உடைந்துள்ளன. வீதிகளில் மண்திட்டுக்கள் வீழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்விநியோகமும்இ நீர்விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலைமை பற்றி மத்திய மாகாண பிரதம செயலாளர் எமது நிலையத்திடம் விபரித்தார். மாகாண ஆளுனரின் ஆலோசனைக்கு அமைய நேற்று (25) ஸ்தாபிக்கப்பட்ட விசேட இடர் பதிலளிப்பு அலுவலகத்தின் மூலம் தகவல்கள் திரட்டப்படுகின்றன. முன்னுரிமை அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.
கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்ட செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் பொருட்சேதங்களை மதிப்பிட்டு, எதிர்காலத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய மாகாண பெருந்தெருக்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மதுபானி பியசேன தகவல் தருகையில், இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீதிகளையும், பாலங்களையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை திருத்தி வருவதாக தெரிவித்தார்.
பிங்கா-ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய அக்குரணை நகரில், பிரதான மின்கம்பம் சரிந்து வீழ்ந்துள்ளது. நீர்க்குழாயொன்று வெடித்துள்ளது. இவற்றை விரைவில் திருத்தி நீர்விநியோகத்தையும், மின்விநியோகத்தையும் திருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலநிலை ஓரளவு சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளதால்; இன்று நிலைமை சீரடையும் என கண்டி மாவட்ட இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தேஷப்ரிய பண்டார நம்பிக்கை வெளியிட்டார்.