புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அரசு அனுமதியுடன் தனியார் நிறுவனம் ஒன்று ரெஸ்டோ பார் துவங்கியது. இப்பகுதியில் ரெஸ்டோ பார் வந்தால் அப்பகுதி பெண்கள் பாதிக்கப்படுவார்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும், என அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எதிர்ப்பையும் மீறி நேற்று முன்தினம் ரெஸ்டோ பார் திறக்கப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் மதுக்கடைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடையின் முன்பு அ.தி.மு.க வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில், ரெஸ்டோ பாரின் உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி மதுக்கடை முன் முற்றுகையிட்டனர். இந்நிலையில் திடீரென முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் அப்பகுதி பெண்கள், ஆண்கள் மதுக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலி, கண்ணாடி, பொருட்களை உடைத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, போலீசார் முன்னிலையில், வையாபுரி மணிகண்டன் மதுபான பார் அடித்து உடைத்தது சிசிடிவி காட்சிகள் மூலம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.