வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பப்பல்லோ: அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக மின்சாரம் இன்றி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை இழந்தது. பனிப்புயலில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களிலும், ‘வெடிகுண்டு சூறாவளி’ எனப்படும் கடுமையான பனிப்புயல் வீசுகிறது. அங்கு, ‘மைனஸ் 48 டிகிரி செல்ஷியஸ்’ குளிர் வாட்டி வதைக்கிறது. ஏரிகள் உறைந்து போயுள்ளன.
வீடுகளும், வெளியே நிற்கும் கார்களும் பனியால் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் பல அடிக்கு பனிக்கட்டிகள் மூடியுள்ளன. இதனால், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
![]() |
பனிப்புயலால் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாகாணங்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி 36 மணி நேரத்திற்கும் மேலாக வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
அவசர மருத்துவ உதவிக்கு கூட ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை உள்ளது. ஒரு நோயாளியை அழைத்தக் கொண்டு மருத்துவமனை செல்ல, மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆவதாக கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டது. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடப்பதால், மால் உள்ளிட்ட பொது இடங்கள் வெறிச்சோடின. அமெரிக்காவின் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement