நியூயார்க், அமெரிக்காவில் மூன்று நாட்களுக்கு மேலாக வீசி வரும் பனி சூறாவளியால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நகரங்களில், மின்சார வினியோக பாதிப்பு தொடர்கிறது. பனிப் பொழிவு தொடர்பான சம்பவங்களில், ௩௨ பேர் உயிரிழந்து உள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான குளிர்கால பனி சூறாவளி வீசி வருகிறது. அனைத்து மாகாணங்களிலும் உறைநிலைக்கு கீழே வெப்பநிலை பதிவாகியுள்ளது. பனிப்பொழிவு தொடர்வதால், வீடுகள், வாகனங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன.
மிகவும் குறைந்தபட்சமாக கடந்த ௨௩ம் தேதி, மைனஸ் ௪௮ டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. பெரும்பாலான மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு, உறையவைக்கும் பனிக்காற்று தொடர்ந்து வீசி வருகிறது.
பல மின் வினியோக மையங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன. நாட்டின் மேற்கு பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க்கை ஒட்டி உள்ள பப்பல்லோவில் உள்ள மின் வினியோக மையத்தில், ௧௮ அடிக்கு பனி படர்ந்துள்ளது. இதனால், கடந்த மூன்று நாட்களாக, இப்பகுதிகளில் மின்சார வினியோகம் இல்லை.
பனி சூறாவளி துவங்கிய தினத்தில், ௧௫ லட்சம் வீடுகளில் மின்சார வசதி தடைபட்டது. தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளது.
இருப்பினும், பல லட்சம் வீடுகளுக்கு மின் வசதி கிடைக்கவில்லை.
கடுமையான பனிப் பொழிவால், சாலைகள் மூடப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வெளியூர் மற்றும் சொந்த ஊருக்கு செல்லும் பயணத் திட்டங்களை கைவிட்டு, மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
கடந்த ௨௪ம் தேதி ௭,௬௦௦க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று முன்தினம் ௬,௦௦௦ விமானங்களும், நேற்று, ௫,௦௦௦ விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
பனி தொடர்பான சம்பவங்களில், நாடு முழுதும், ௩௨ பேர் உயிரிழந்துள்ளனர். அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் கூட இயக்க முடியாத அளவுக்கு பல பகுதிகளில் சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன.
பப்பல்லோவில் நேற்று முன்தினம் மட்டும், ௮ அடி உயரத்துக்கு பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதிக்குள் யாரும் நுழைய முடியவில்லை.
இந்த பனி சூறாவளி பாதிப்பு மேலும் சில நாட்களுக்கு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா கடந்த ௧௯௭௭ல் மிகக் கடுமையான பனி சூறாவளியை சந்தித்தது.
தற்போது, அதைவிட அதிக நாட்கள், அதிக வீரியத்துடன் பனி சூறாவளிவீசி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்