சுனாமி கடற்பேரழிவுக்கு 18 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து அம்பாறை மாவட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) இடம்பெற்றது.
கடற்போரழிவினால் பெரும் உயிரிழப்பு உடமைகள், சொத்துக்கள் என பாதிப்பு இந்த மாவட்டத்திலும் இடம்பெற்றது.
மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த துஆ பிராத்தனை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குரான் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் சுனாமி நினைவுரையை மௌலவி எம்.ஜவாத் ரஸா பிர்தௌஸ் (அல் ஹாபிழ்) நிகழ்த்தினார். மத்ரஸதுல் இர்ஸாதியா அதிபர் அப்துல் கரீம் (அல் ஹாபிழ்) துஆ பிராத்தனை செய்தார். மேலும் அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ், மௌலவி எம்.ஏ.எம்.ரியாஸத் உட்பட உலமாக்கள், இர்ஷாதியா குரான் மதரஸா மாணவர்கள் ஆகியோரும் குரான் ஓதி தமாம் செய்தனர்.
இந்நிகழ்வில் அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், குரான் மதரஸா நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள், சமூக பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
சுனாமியினால் உயிரிழந்த உறவுகளுக்கான துஆப் பிரார்த்தனை நிகழ்வு அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு அந் நூர் ஜூம்ஆப் பெரியபள்ளிவாசலில் சுனாமி தினமான இன்று (26) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாஸீன் ஓதுதல், பயான் நிகழ்ச்சி, துஆப் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. இந் நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான், மாளிகைக்காடு கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் ஏ. ஏ.நஜீம், பள்ளிவாசலின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை ,கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நினைவு தின நிகழ்வு கிண்ணியா பீச்சில் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம் பெற்றது. இரு நிமிட மௌன அஞ்சலியும் துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிண்ணியா கிளை உலமா சபை உறுப்பினர்கள்,சூரா சபை உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா உப்பாறு கடலூர் கோயிலிலும் சுனாமியால்உயிரிழந்தவர்களுக்கான விசேட பூஜை வழிபாடும் கடல் மாதாவுக்கு கடலில் பூ தூவி அஞ்சலி நிகழ்வும் .டம்பெற்றது . இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுனாமியால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்ட சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் ஹிஜ்ரா மஸ்ஜிதில் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வும் விஷேட துஆ பிராத்தனையும் பள்ளிவாசலின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஹிஜ்ரா மஸ்ஜிதின் ஆரம்பகால தலைவரும் சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளரும், சட்ட ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளரும் தற்போதைய பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் பள்ளிவாசலின் சிரேஷ்ட ஆலோசகருமான அல்- ஹாஜ் எ.எல்.எம்.சலீம் அவர்கள் கலந்து கொண்டனர்
கத்தமுல் குர்ஆன் தமாம் மற்றும் விஷேட துஆ பிராத்தனை நிகழ்வுக்கு சாய்ந்தமருது ஹத்தீப் முஹத்தீன் சம்மேளனத்தின் தலைவரும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாமுமான அல்-ஹாஜ் எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரஷாதி) அவர்கள் தலைமை வகித்தார்.
பள்ளிவாசலின் செயலாளர் கே.எம்.முகம்மட் சஹீது மற்றும் பொருளாளர் ஏ.எம்.அக்பர் ஆகியோரது வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் இமாம்கள், மதரஸா மாணவர்கள் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.