இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லையில் இமயமலையில் வளரும் மருத்துவ குணம் கொண்ட பூஞ்சைகளை திருடத்தான் அடிக்கடி சீன ராணுவ வீரர்கள் எல்லையில் ஊடுருவுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒட்டி இந்த எல்லை செல்கிறது. இதில், இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தை திபெத்தின் ஒருபகுதியென கூறும் சீனா அது தனது நிலப்பகுதி என சொந்தம் கொண்டாடுகிறது.
அதுமட்டுமின்றி, அருணாச்சல் எல்லையில் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். சமீபத்தில், அருணாச்சலின் தவாங் செக்டாரில் இந்திய, சீன துருப்புகள் நேருக்கு நேர் சந்தித்ததால் மோதல் சம்பவமும் நடந்தது. இந்நிலையில், அருணாச்சலில் சீனா வீரர்கள் அடிக்கடி ஊடுருவ காரணம், அங்கு இமயமலைத் தொடரில் விளையும் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பூஞ்சையை திருடுவதற்குதான் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்தோ பசிபிக் தகவல் தொடர்பு மையம் அளித்த தகவலின்படி, மருத்துவ குணம் கொண்ட கார்டிசெப்ஸ் அல்லது கம்பளி பூச்சி பூஞ்சை சீனாவில் மிகவும் விலை உயர்ந்தது.
இது இமயமலைகளில் அதிகம் காணப்படுகிறது. இதனால் ‘இமயமலை தங்கம்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பூஞ்சை சீனாவில் தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கது. புற்றுநோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக கம்பளி பூஞ்சைகள் உள்ளன. இதனால் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் சீனாவில் தொன்று தொட்டு உள்ளது. இத்தகைய பூஞ்சையை தேடித்தான் சீன வீரர்கள் அருணாச்சல் எல்லையில் அடிக்கடி வருவதாக ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த பூஞ்சை பொதுவாக இமயமலைப் பகுதிகளிலும், தென்மேற்கு சீனாவில் கிங்காய் – திபெத்திய பீடபூமியின் அதிக உயரமான பகுதிகளில் காணப்படுகிறது.
உலகிலேயே கம்பளிபூச்சி பூஞ்சையின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சீனாதான். ஆனால் சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இந்த பூஞ்சை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் அறுவடை குறைந்த நிலையில், தேவை அதிகரித்து வருகிறது. 2010, 2011ம் ஆண்டுகளில் சீனாவில் 1.5 லட்சம் கிலோ கம்பளி பூச்சி பூஞ்சை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2018ம் ஆண்டில் 41,200 கிலோவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக இதன் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, இமயமலைகளில் உள்ள பூஞ்சைகள் மீது சீன ராணுவம் குறிவைத்து செயல்படுவதாக கூறப்படுகிறது.