புலந்த்சாஹர்: உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் நடந்த மதக் கூட்டத்தில் உரையாற்றிய முஸ்லிம் உலேமா ஒருவர், இஸ்லாமிய திருமணங்களில் பாட்டு, நடன நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பேசியது தொடர்பாக மவுலானா ஆரிஃப் காசிம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “முஸ்லிம் திருமணங்களில் நடனம், பாட்டை ஊக்குவிக்கக் கூடாது. அது இஸ்லாமிய கலாச்சாரம் இல்லை. மேலும் இதுபோன்ற கேளிக்கை நிகழ்வுகளால் திருமணத்திற்கான செலவு அதிகரிக்கிறது. இதுபோன்ற சமூக அழுத்தங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டாம் எனக் கருதுகிறேன். மேலும், இவற்றைத் தடுப்பதால் பெண் வீட்டாருக்கான கூடுதல் நிதிச் சுமைகள் தரப்படாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
அவருடைய இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. சிலர் இது சரியான முடிவு என்றும், இன்னும் சிலர் இது ஏற்கத்தக்கது அல்ல என்றும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். பிற்போக்குத்தனத்தை எந்த நாகரிக சமூகமும் ஊக்குவிக்கக் கூடாது என்று கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.