`இதை படித்தவுடன் எனக்கு யாருடனோ பிரச்னையென நினைக்காதீர்கள்”- டிஸ்க்ளைமர் போட்ட அஸ்வின்!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் அஸ்வின் தான். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து பல சாதனைகளைக் குவித்து வந்த அஸ்வின், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு தரமான சம்பவத்தை நிகழ்த்தி சாதனையும் படைத்திருந்தார். இதையடுத்து அவர் போட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வங்கதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற நிலையில் வங்கதேசத்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. 

இப்போட்டி மூலம், கபில்தேவ்கூட செய்யாத ஒரு சாதனையை அவரை பின்னுக்குத் தள்ளி முதல் இந்திய வீரராகச் செய்து காட்டியிருக்கிறார் அஸ்வின். அஸ்வினின் சாதனை என்னவெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் அஸ்வின், 400 விக்கெட்டுகளை கைப்பற்றி 3,000 ரன்களையும் குவித்து, இதை சாதித்த முதல் இந்திய வீரராக இருக்கிறார்.

86 போட்டிகளில் பங்கேற்று, இந்த சாதனையைப் படைத்திருக்கும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீக்கு பிறகு இரண்டாவது வீரராக இந்த சாதனையை படைத்திருக்கிறார் அஸ்வின். இதே 400 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற சாதனையை கபில்தேவ் 131 போட்டிகளில் செய்திருந்தார். அவரை பின்னுக்குத் தள்ளிக் குறைவான போட்டிகளில் இதை நிகழ்த்திக் காட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

image

இந்த ஆட்டத்தின் 4ஆவது நாளான நேற்று, இந்திய அணி ஆட்டத்தைப் பெரிதும் விக்கெட்டுகளை இழக்காமல் இறுதிவரை எடுத்து செல்லும் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், 56 ரன்களில் உனாத்கட்டை வெளியேற்றி 5வது விக்கெட்டை கைப்பற்றினார் ஷாகிப் அல் ஹசன். பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் போட்டியை எளிதாகவே இந்திய அணிக்கு எடுத்துச் செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் இந்திய அணிக்கு வில்லனாக மாறி மெஹிதி ஹாசன் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேலை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

வெற்றி யாருக்கு என்ற கேள்வியே எழ ஆரம்பித்த நிலையில் 8வது விக்கெட்டுக்கு கைகோர்த்த அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். போட்டியை விரைவாகவே முடிக்க நினைத்த அஸ்வின் இறுதிக் கட்டத்தில் பவுண்டரிகள் சிக்சர் என பறக்க விட 7 விக்கெட்டுக்கு 145 ரன்களை எட்டிய இந்திய அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
image

உலக சாதனை ஒருபக்கம், போட்டியில் வெற்றி என சாதித்த அஸ்வினுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “நான் இந்திய ஜெர்சியை பெருமையுடன் அணிய தொடங்கிய நாள் தொடங்கி, இன்று வரை ஓவர் திங்க்கிங் (Overthinking) எனக்குள் உண்டு. எப்போதும் எதையும் அதீதமாகவே யோசிப்பேன். அந்த பழக்கமென்பது என்னை இப்போதும் பின்தொடர்வதாகவே நினைக்கிறேன். விஷயம் என்னவெனில், இப்போதுதான் இதன் தீவிரத்தை நான் உணர்கிறேன். அதைப் பற்றி யோசித்து வருகிறேன். இதிலிருந்து வெளிவர உரிய பயிற்சியை நான் எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொருவரின் பயணமும் சிறப்பு வாய்ந்தது மற்றும் தனித்துவமானது. சிலரின் பயணங்களில் அதீதமாக எதையும் யோசிப்பதென்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் சிலருக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே இப்போது உணர்கிறேன். இதுபற்றி ஒருசிலர் என்னிடமே தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் நான் `இதுதான் என் பாணி. என் பாணியில்தான் நான் விளையாடுகிறேன். மற்றவர்களையும் விளையாடப் பரிந்துரைக்கிறேன்’ என நினைத்து என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்வேன்.

“Overthinking” is a perception that has followed me ever since I wore the Indian jersey with pride. I have pondered about it for a while now and believe I should have seriously considered a PR exercise to erase that word out of peoples minds. Every person’s journey is special
— Ashwin (@ashwinravi99) December 25, 2022

அப்படி நினைத்துதான் ஒவ்வொரு போட்டிக்கும்பிறகு நான் விளையாடியதை பற்றி ஆழமாகச் சிந்தித்து, அந்த ஆட்டத்தை பற்றி எனது கருத்துக்களை வெளியே பகிர்ந்துகொள்வேன். ஏனென்றால் யோசனைகள் பகிரப்படும்போதுதான், அவை சாதனைகளாகப் பெருகும் என்று நான் நம்புகிறேன். எனது குறிக்கோள் எப்போதுமே வார்த்தைப் போரில் வெற்றி பெறுவது அல்ல, அடுத்தடுத்து விளையாட்டில் கற்றுக்கொள்வது.

இதை நான் இப்போது சொன்னவுடன், எனக்கு யாருடனோ பிரச்னையென அல்லது யாரையோ பற்றி பேசி அது சிக்கலாகிவிட்டது என்று நினைக்கவேண்டாம். எனக்கு எந்த சக வீரருடனும் அல்லது யாருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லை. என்னுடைய இந்த கிரிக்கெட் பயணத்தினை பற்றி சில கட்டுரைகளில் நான் சில விஷயங்களை படித்தேன். அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாகவே இதை சொல்கிறேன். இந்த வார்த்தை ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு 13 ஆண்டுகள் பிடித்த்துள்ளன” என்றுள்ளார்.

image

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகள் & 3,000 ரன்கள் என்ற சாதனையைப் படைத்த வீரர்கள் பட்டியல், அனைத்து காலத்திற்குமான டெஸ்ட் ஆல்ரவுண்டரில் இருக்கும் ஒரே இந்திய வீரர் அஸ்வின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த ட்வீட், பலருக்கும் பாடமாகவும் இருக்குமென அவர் நம்புவதாக தெரிவித்திருக்கிறார் அவர்.

– ஷர்நிதாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.