வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: எல்லை பிரச்னை தீவிரமாக இருக்கும் நிலையில், நம் அண்டை நாடான சீனாவுக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான நல்லுறவுக்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளது.
இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை தீவிரமாக உள்ளது. கடந்த 2020ல் கிழக்கு லடாக்கில் அத்துமீறி சீனா நுழைய முயன்றது. இதையடுத்து, எல்லையில் தொடர்ந்து இரு நாட்டு படைகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இம்மாதம் 9ம் தேதி சீனப் படைகள் அத்துமீறி நுழைய முயன்றன.
இந்த முயற்சியை நம் படைகள் முறியடித்தன. அப்போது நடந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நம் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், ‘இரு நாட்டின் ராணுவ படைத் தளபதிகள் நிலையில் பேச்சு நடத்தப்பட்டது.
‘இதில் எல்லையில் அமைதி நிலவுவதையும், தற்போதுள்ள நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் தீர்மானிக்கப்பட்டது’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்னை தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் வலியுறுத்தி வந்தன.
![]() |
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் சீனா இடையே துாதரக உறவு வாயிலாகவும், ராணுவ உறவு வாயிலாகவும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. எல்லையில் ஸ்திரத்தன்மை ஏற்படவும், அமைதி நிலவுவதை உறுதி செய்யவும் இரு நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இரு நாடுகள் இடையே வலுவான நல்லுறவு ஏற்படவும், சிறந்த எதிர்காலத்தை நோக்கி செல்லவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement