சென்னை: ஊர்தோறும் அம்பேத்கர் நூலகம் ஏற்படுத்தும் பணிக்கான ஒருங்கிணைப்புக் குழுவை விசிக தலைவர் திருமாவளவன் அமைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் 2.0 திட்டத்தின்படி சட்ட மேதை அம்பேத்கர் கருத்துகளைத் தொகுத்து 50 நூல்களை உருவாக்குதல் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் நூலகம் அமைத்தல் ஆகிய திட்டத்தை 6 ஆயிரம் கிராமங்களில் கொண்டுசேர்க்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது. இதனை மேற்கொள்வ தற்கான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.
இதற்கு தலைவராக நான் பொறுப்பு வகிக்கிறேன். அம்பேத்கரியம் 50 தொகுப்பை உருவாக்கிய கெளதம சின்னா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இதேபோல் ஒருங்கிணைப்புக் குழுவில் விசிக நிர்வாகிகள் உஞ்சை அரசன், நீலசந்திரகுமார், மோ. எல்லாளன், வெ.கனியமுதன், கவிஞர் இளமாறன், சி.பி.சந்தர், வ.கனல்விழி ஆகியோரும், படிப்பகக் கட்டட ஆய்வுக் குழுவில் ஏ.சி.பாவரசு, கி.கோவேந்தன், ம.சங்கத்தமிழன், புதுவை க.பாவாணன், இளஞ்சேகுவாரா ஆகியோரும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழுவில் அறிவமுதன், கோ.பார்த்தீபன், சஜன்பராஜ் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர். இதன் துணைக் குழுக்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்பட்ட இக்குழுவினர் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு அம்பேத்கர் படிப்பகம் மற்றும் அம்பேத்கரியம் 50 தொகுப்பு பரவலாக்கத்தை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.