புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது, செயல்படாத நீதிபதிகளின் பணி ஆண்டுகளை நீட்டிக்கக்கூடும். அரசு ஊழியர்களும் இதே கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் அடுக்கடுக்கான விளைவை ஏற்படுத்தலாம் என்று நாடாளுமன்ற நிலை குழுவிடம் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் 62 வயதிலும் ஓய்வு பெறுகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்காக 2010ம் ஆண்டு அரசியலமைப்பு, 114வது திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இருப்பினும், அது நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
15வது மக்களவை கலைக்கப்பட்டவுடன் காலாவதியானது. இந்நிலையில், ‘உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை’ என கடந்த ஜூலை மாதம் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, பாஜ எம்பி சுஷில் மோடி தலைமையிலான பணியாளர்கள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் நீதித்துறை அமைச்சகம் ஒரு விளக்கம் அளித்து உள்ளது. அதில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது, செயல்படாத நீதிபதிகளின் பணி ஆண்டுகளை நீட்டிக்கக்கூடும்.
ஒன்றிய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கமிஷன்கள் போன்றவற்றில் உள்ள அரசு ஊழியர்கள் இதே போன்ற கோரிக்கையை எழுப்புவதால், விளைவை ஏற்படுத்தும். எனவே, இந்த பிரச்னையை முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும். ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமை அதிகாரிகளாக அல்லது நீதித்துறை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பதை தீர்ப்பாயங்கள் இழக்க நேரிடும்’ என்று நீதித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.