புதுடில்லி புதுடில்லி, ஹரியானா உட்பட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக, குளிர் அதிகரித்துள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரி ‘செல்ஷியசுக்கு’சென்றுள்ளது.
வட மாநிலங்களான புதுடில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகியவற்றில், கடந்த நவம்பரில் இருந்தே குளிர் அதிகரிக்கத் துவங்கியது.
இந்நிலையில் சமீப நாட்களாக, இங்கு பனிப்பொழிவு கடுமையாக அதிகரித்துள்ளது. குளிர் வாட்டி வதைப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது.
ராஜஸ்தானின் தார் பாலைவனம் அருகே அமைந்துள்ள சுரு மாவட்டத்தில், நேற்று முன் தினம் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால், வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்ஷியசுக்கு சென்றது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.
இதேபோல், ராஜஸ்தானின் மலைப் பிரதேசமான மவுன்ட் அபு நகரில், வீடுகள், கார் உள்ளிட்ட வாகனங்கள், சாலைகள் ஆகியவையும் பனிமழையில் உறைந்துள்ளன.
பஞ்சாப், ஹரியானா, புதுடில்லியிலும் கடும்பனிப்பொழிவு ஏற்பட்டுஉள்ளது. பஞ்சாபின் அமிர்தசரசில் வெப்பநிலை நேற்று 6.5 டிகிரி செல்ஷியசாக பதிவானது.
இதேபோல், உத்தர பிரதேசத்தின் காஜியாபாத், உத்தரகண்டின் ஹரித்துவார் ஆகிய நகரங்களில் கடும் பனிப் பொழிவால் வெப்பநிலை நேற்று 10 டிகிரி செல்ஷியசாக குறைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement