மத்தியப் பிரதேசத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் அதிகாரபூர்வ பங்களா ஒன்றில் கல்லூரி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போபாலில் ஷியாமலா ஹில்ஸ் பகுதியில் நடந்திருக்கும் இந்தச் சம்பவத்தில் தற்கொலை கடிதம் ஒன்று தற்போது போலீஸ் கையில் சிக்கியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி தற்கொலை செய்துகொண்ட தீரத் சிங் எனும் கல்லூரி மாணவன் 4 வருடங்களாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஓம்கார் சிங் மார்க்கமின் அதிகாரபூர்வ பங்களாவில் தங்கிப் படித்துவந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தீரத் சிங் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், போபாலில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தற்கொலைக் கடிதம், தற்கொலை செய்துகொண்ட மாணவனின் கையெழுத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை அறிய கையெழுத்து நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்துப் பேசிய ஷியாமலா ஹில்ஸ் காவல் நிலைய அதிகாரி உமேஷ் யாதவ், “தற்கொலைக் குறிப்பு மற்றும் மாணவனின் குடும்பத்தினர் கூறியதிலிருந்து பார்க்கையில் மாணவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது தெளிவாகிறது. இந்த விஷயத்தை அனைத்து கோணங்களிலும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வந்து, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.