சென்னை: தமிழகத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த காவல்துறையினரை முதல்வர் ஸ்டாலின் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கஞ்சாவை சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு 4 பேர் அடங்கிய கஞ்சா போதை கும்பல், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே உள்ள கடைகளில் நுழைந்து, கடை உரிமையாளர்களை கத்தி மற்றும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அவர்களைத் தாக்கி, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் சுமார் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், 2 நாட்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த பல்மருத்துவர் கவுதம் என்பவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்ற 3 பேர், மருத்துவரிடம் ரூ50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். மாமூல் தர மறுத்த மருத்துவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டனர். தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
இவ்விரு சம்பவங்களிலும் குற்றவாளிகள் கஞ்சா போன்ற போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவத்தில், போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக 2 சிறுவர்களைக் கைதுசெய்து காவல் துறையினர் கணக்கு காட்டியுள்ளனர். கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்து, தண்டனை பெற்றுத் தந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது.
செல்போன் பறிப்பு: கடந்த 20-ம் தேதி சென்னை, திரு.வி.க. நகரைச் சேர்ந்த 26 வயதுடைய தினேஷ்குமார் என்பவர் பேருந்தில் பயணியிடம் செல்போன் பறித்த வழக்கில் துரைப்பாக்கம் போலீஸார் தினேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.பின்னர் வீட்டுக்கு சென்றவர் உயிரிழந்துள்ளார். போலீஸார் தாக்கியதால் தனது கணவர் இறந்ததாக திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். உள்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல் துறையினர் இல்லை என்பதை இதுபோன்ற தொடர் லாக்அப் மரணங்கள் நிரூபிக்கின்றன.
இனியாவது காவல் துறையினரை தங்களது ஏவல் துறையாகபயன்படுத்தாமல், சட்டம்-ஒழுங்கையும், குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.