தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை மையம் விடுத்து உள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று இரவு விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை வேளையில் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் பூலத்தூர் பிரிவு அருகே ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் இரு புறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன, இதனால் பயணிகள் பெரும் அவதிற்குள்ளாகினர். தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரத்தினை ஜேசிபி வாகனத்தை கொண்டு அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதால் போக்குவரத்தானது 1 மணி நேரத்திற்கு பிறகு சீரானது.
மலைச்சாலையில் காலை வேளையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பாக காணப்பட்டது, மேலும் மலைப்பகுதியில் குளுமையான சூழலே நிலவி வருகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் சுற்றுலா செல்லும் பயணிகள் கவனமுடன் சாலைகளில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.