பீஜிங் : ‘கொரோனா பாதிப்பு குறித்த தினசரி தகவல்களை இனி வெளியிடப் போவதில்லை’ என, சீனாவின் தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றான பி.எப்., 7 அதிவேகமாக பரவி வருவதால், தினசரி 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 20 நாட்களில் மட்டும் 25 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பின் முதல் அலையின் போது ஏற்பட்ட இழப்புகள் குறித்து, சரியான தகவல்களை சீனா அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது.
அதேபோல் இந்த முறையும், சரியான பாதிப்புகள் குறித்தும், பலி எண்ணிக்கை குறித்தும் தகவல் தருவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, தொற்று பாதிப்பு குறித்த தகவல்களை இனி வழங்கப் போவதில்லை என, தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மையம் தான் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தது.
தேசிய சுகாதார மையத்துக்கு பதிலாக, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், தொற்று பாதிப்புகள் குறித்து தகவல்களை வெளியிடும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்களை சீனா வெளியிடவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement