புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சிறப்பு வசதிகள் விதிகளை மீறி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே அவருக்கு ஒருவர் மசாஜ் செய்வது, சிறை அறையில் அவர் பலரை சந்தித்து பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், சிறையில் ஆம் ஆத்மி அமைச்சருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவரது அறையில் இருந்த டேபிள், சேர் உள்ளிட்ட பல வசதிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், அமைச்சரை 15 நாட்களுக்கு பார்வையாளர்கள் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.