செஜியாங்: சீனாவின் செஜியாங் மாகாணத்தில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுவதாகவும் விரைவில் அது இருமடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானதோடு, மக்களும் உளவியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால் சீனாவின் தீவிர ஊரடங்குக்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதையடுத்து அந்நாட்டில் கரோனா தொற்றின் புதிய திரிபு மிக வேகமாக பரவி வருகிறது.
ஷாங்காய்க்கு அருகில் உள்ள தொழில் மாகாணமான செஜியாங்கில் 6.65 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுவதாகவும் புத்தாண்டுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும், மயானங்கள் நிரம்பி வழிவதாகவும் சர்வதேச செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், சீன அரசு கடந்த வாரத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனா அரசு கரோனா தொற்று தொடர்பாக உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அப்போதுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.