ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்ரிக்காவில், டேங்கர் லாரி விபத்தில் சிக்கி வெடித்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கின் கிழக்கு பகுதியில் உள்ள போக்ஸ்பர்க் என்ற இடத்தில், தாழ்வான பாலத்தைக் கடக்க முயன்ற பெட்ரோல் டேங்கர் லாரி, பாலத்தின் அடியில் சிக்கியது. அந்த லாரியை நகர்த்த முயன்ற போது பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதில், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் உடல் கருகி பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில், பாலத்தின் அருகில் இருந்த வீடுகள் மற்றும் கார்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன.
மேலும், அருகில் இருந்த மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement