புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தொலைதொடர்புத் துறையில் நேர்மையற்ற முறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் 10 பேரை கட்டாய ஓய்வில்அனுப்ப மத்திய தகவல் தொடர்புமற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி அளித்துள்ளார்.
ஊழலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த நடவடிக்கையில் கீழ் அரசுத் துறையில்நேர்மைற்ற முறையில் செயல்பட்ட சுமார் 400 அதிகாரிகள் அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொலை தொடர்பு துறையில் முதல் முறையாக, நேர்மையற்ற முறையில் செயல்பட்ட 10 உயர் அதிகாரிகளை ஓய்வூதிய விதிகள், 1972 சிசிஎஸ்(ஓய்வூதியம்) 48-ன் கீழ் உள்ள 56(ஜே) பிரிவின் படி கட்டாய ஓய்வில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 9 பேர் இயக்குநர் அந்தஸ்தில் பணியாற்றியவர்கள். ஒருவர்இணை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றியவர் என தொலைதொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை சிறந்த நிர்வாக தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அதற்கு முதல்நாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் மூத்த பிஎஸ்என்எல் அதிகாரி முறைகேட்டில் சிக்கினார். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒதுக்கிய ரூ.1.6 லட்சம் கோடி நிதியில் இவர் முறைகேட்டில் ஈடுபட்டது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூட்டத்தில் கண்டறியப்பட்டது. அவருக்கு விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டது.
ரயில்வே துறையிலும் ஒழுங்காகபணியாற்றாத மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள் சுமார் 40 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவர்களில் செயலாளர் ஒருவர், சிறப்பு செயலாளர் இருவரும் அடங்குவர். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை முதல் 2022-ம்ஆண்டு ஜூன் வரை 395 அதிகாரிகள் மீது முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இவர்களில் 203 பேர் குரூப் ஏ அதிகாரிகள், 192 பேர் குரூப் பி அதிகாரிகள் ஆவர்.
நேர்மையற்ற அதிகாரிகளுக்குகட்டாய ஓய்வு அளிக்கும் இந்தவிதிமுறை வருவாய்துறையில்தான் முதல் முதலில் பயன்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில்வே உட்பட இதர துறைகளிலும், இந்த பிரிவின் கீழ் ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.