காத்மாண்டு,
நேபாளத்தில் தேர்தல் முடிந்து ஒரு மாதமாக இழுபறி நீடித்த நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா, 68, மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில், ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், ௮௯ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது.
தேர்தலுக்கு முன் நேபாளி காங்கிரஸ் மற்றும்நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி கூட்டணி வென்றால் நேபாளி காங்கிரசை சேர்ந்த பிரதமர் ஷேர்பகதூர் துாபா மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா தலா இரண்டரை ஆண்டு பிரதமராக இருக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், முதல் இரண்டரை ஆண்டுகள் பிரதமராக இருக்க பிரசண்டா விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கு துாபா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், புதிய அரசு அமைவதற்கு உரிமை கோர அதிபர் வித்யா தேவி பண்டாரி காலக்கெடு விதித்திருந்தார். இந்தக் காலக்கெடு நேற்று முன்தினம் மாலையில் முடிவதாக இருந்த நிலையில், திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் பிரசண்டா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இது தொடர்பாக, மற்றொரு முன்னாள் பிரதமரான நேபாள கம்யூனிஸ்ட் – ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒலி மற்றும் பிரசண்டா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதில், முதல் இரண்டரை ஆண்டுகள் பிரசண்டா பிரதமராக இருக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மேலும் சில சிறிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து காத்மாண்டுவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரசண்டா நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். அவருக்கு அதிபர் வித்யா தேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன், சர்மா ஒலி கட்சியின் விஷ்ணு பவுதால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நாராயண் காஜி சிரேஷ்டா, ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் ரபி லாமிச்செனே ஆகியோர் துணை பிரதமர்களாக பதவியேற்றனர். இவர்களைத்தவிர, வேறு சிலர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்தக் கூட்டணிக்கு ௧௬௯ எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ௩௦ நாட்கள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பிரசண்டா மற்றும் சர்மா ஒலி இருவரும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர்கள். மேலும் சீனாவுக்கு ஆதரவானவர்கள்.
அதனால், இந்தியா – நேபாளம் இடையேயான உறவில் பெரிய முன்னேற்றம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்