காத்மாண்டு: நேபாள அரசியலில் ஒரே நாளில் நடந்த திடீர் திருப்பங்களில், எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா, 68, அந்த நாட்டின் பிரதமராக இன்று(டிச.,26) பொறுப்பேற்றார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், 87 ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக, கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகளுடன் நேபாளி காங்கிரஸ் பேச்சில் ஈடுபட்டது.
தேர்தலுக்கு முன், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாளி காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஐந்து ஆண்டு கால ஆட்சியில், இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருக்க முடிவு செய்யப்பட்டது.
புதிய அரசை அமைக்க, அதிபர் வித்யா தேவி பண்டாரி, ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளார். இந்த அவகாசம்முடிவடையும் நிலையில், அங்கு திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நேபாள காங்கிரசைச் சேர்ந்த பிரதமர் ஷேர் பகதுார் துாபா மற்றும் பிரசண்டா இடையே பேச்சு நடந்தது.
இதில், முதல் இரண்டரை ஆண்டுகள் பிரதமராக இருக்க பிரசண்டா விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இதை துாபா ஏற்கவில்லை. இதனால், பேச்சு தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரான நேபாள கம்யூனிஸ்ட் – ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒலியை, பிரசண்டா சந்தித்து பேசினார். அப்போது பல சிறிய கட்சிகளும் இதில் இணைந்து கொண்டன. இந்தப் பேச்சில், புஷ்பகமல் பிரசண்டா முதல் இரண்டரை ஆண்டுகளும், அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகளில் கே.பி.சர்மா ஒலியும் பிரதமராக இருப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டணிக்கு, 165 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. சர்மா ஒலி கட்சிக்கு 78 எம்.பி.,க்களும், பிரசண்டா கட்சிக்கு, 32 எம்.பி.,க்களும் உள்ளனர்.

இந்நிலையில் பிரசண்டாவை அடுத்த பிரதமராக நியமித்து, அதிபர் வித்யா தேவி பண்டாரி நேற்று(டிச.,25) உத்தரவு பிறப்பித்தார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா, 68, அந்த நாட்டின் அடுத்த பிரதமராக இன்று(டிச.,26) பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி பிரசண்டாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்