'பரம்வீர் சக்ரா' வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

சென்னை: பண்பு மற்றும் கலாச்சார பயிற்சிமுனைவு அறக்கட்டளை சார்பில்,75-வது சுதந்திர தின அமிர்த மகோத்ஸவத்தை 1,000 பள்ளிகளில் கொண்டாடும் வகையில்,‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை செலுத்துவதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவர் என்.கோபாலசுவாமி வரவேற்றார். இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென்பிராந்திய ராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஏ.அருண் ஆகியோர், பரம்வீர் சக்ரா விருது பெற்ற, ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் மற்றும் கவுரவ கேப்டன் யோகேந்தர் சிங் யாதவை கவுரவித்தனர்.

விழாவில் தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி பேசியதாவது:

நமது ராணுவத்தை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் மற்ற நாடுகள் நமக்கு மரியாதை அளிக்கும். நாம் பலவீனமாக இருந்தால், எதிரிகள் நம்மைச் சுற்றி நிற்பார்கள்.

இந்த தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் குறித்த வரலாற்றை, நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் எடுத்துக்கூறி, அவர்கள் மனதில் உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும்.

லால்பகதூர் சாஸ்திரி ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை முன்வைத்தார். இதனால், 1965 போரில் பாகிஸ்தானை நாம் தோற்கடித்தோம். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விகாஸ் ஆர்யா நன்றி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.