திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27 -ம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதை முன்னிட்டு யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மலை கோயில் மேல் பிரகாரத்தில் உள்ள பாறை வேல் மண்டபம் மற்றும் கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பழநி கோயிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பழநி மலை கோயில் பிரகாரங்களில் உள்ள சில்வர் தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள், தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு, 1 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பில் பித்தளையால் ஆன தடுப்பு கம்பிகள், மடக்கு கதவுகள், பாதுகாப்பு வேலிகள் ஆகியவை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “பழநி கோயிலில் குடமுழுக்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதில் திருக்கோயில் நிதி மூலமாக 26 பணிகளும், உபயதாரர்கள் மூலமாக 62 பணிகளும் நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி 27 -ம் தேதி நல்ல முறையில் குடமுழுக்கு நடைபெறும். பழநி முருகன் கோயிலுக்கு ஆண்டுக்கு சராசரியாக ஒரு கோடியே இருபது லட்சம் பக்தர்கள் வருகின்றனர்.

எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, மேலும் இதற்காக பழநி கோயிலில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை தொடங்குவதற்கான டெண்டர்கள் விடப்படும்.
மூலவருக்கு மருந்து சாத்துதல் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை நிரந்த பணியாளர்களாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகம விதிகள் நாமே வகுத்துகொண்டது. எந்த ஒரு பணி செய்தாலும் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது. யாருடைய தலையீடும் இல்லாமல் மூத்த அர்ச்சகர்களோடு கலந்து பேசி ஆகம விதிக்கு உட்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது” என்றார்.