பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட வழிகாட்டி நல்லக்கண்ணு: ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.12.2022) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது பேசிய முதல்வர்

, “ அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த தலைவர், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்திருக்கக்கூடிய ஒரு அரசியல் சிற்பியாக நமக்கு கிடைத்திருக்கக்கூடிய அய்யா நல்லக்கண்ணு அவர்களுக்கு இன்று 98-வது பிறந்த நாள். அவருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று அவரை வாழ்த்துகிற அதேநேரத்தில், அவருக்கு என்னுடைய வணக்கத்தையும் தெரிவித்து, இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

நம்முடைய அன்பிற்கினிய தோழர் முத்தரசன் சொன்னதுபோல, நம்முடைய தமிழக அரசின் சார்பில், “தகைசால் தமிழர்” விருது ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய தலைவர் பெருமக்களை தேர்ந்தெடுத்து வழங்குவது என்று முடிவெடுத்து, முதலாண்டு மார்க்சிஸ்ட் இயக்கத்தினுடைய மூத்த தலைவர் சங்கரைய்யா அவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம்.

அதை தொடர்ந்து, 2வது ஆண்டு நம்முடைய மதிப்பிற்குரிய அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில், அந்த தகைசால் தமிழர் விருதிற்கு பெருமை வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், இவர்களுக்கெல்லாம், வழங்கிய காரணத்தால்தான், அந்த பெருமை, அந்த விருதுக்கு கிடைத்திருக்கிறது.

ஆகவே, அந்த உணர்வோடு, அரசின் சார்பில் நான் வழங்கியிருந்தாலும், இன்றைக்கு அரசின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த இனிய நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று அய்யா நல்லகண்ணு அவர்களை வாழ்த்தி வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த 98 வயதிலும், அவர் தன்னுடைய கொள்கையிலிருந்து என்றைக்கும் நழுவி விடாமல், கொள்கைக்கு இலக்கணமாக, இலட்சியத்திற்கு இலக்கணமாக, அவர் தன்னுடைய பணியை இந்த தள்ளாத வயதிலும் ஆற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த அரும்பணி தொடரவேண்டும். இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கக்கூடிய முயற்சிக்கு வழிகாட்டியாக, அய்யா நல்லகண்ணு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த அரசுக்கும், உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உருவாக்கப்பட்டிருக்கிறக்கூடிய திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு ஒரு பக்கபலமாக உறுதுணையாக இருந்து எப்படி தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல் தொடர்ந்து அவர் வழிகாட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை இந்த நேரத்தில் எடுத்து வைத்து வாழ்க அய்யா நல்லக்கண்ணு அவர்கள் என்று தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.