விருதுநகர் மாவட்டத்தை அடுத்த சாத்தூர் அருகே பள்ளம்பட்டியைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் கணவர் இறந்து விட்டதால் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ய சென்றுள்ளார். அப்பொழுது ஜான்சி ராணி உடன் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தனியார் வங்கியில் வேலை செய்வதாக தெரிவித்த கார்த்திக் ராஜாவுடன் ஜான்சிராணி செல்போனில் பேசி பழகிய பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஜான்சி ராணியிடம் தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி தனது தாயின் தாலி சங்கிலியை கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த நகைகளை பெற்றுள்ளார். பின்னர் கார்த்திக் ராஜா தலைமறைவானதால் சந்தேகம் அடைந்த ஜான்சி ராணி அவர் கொடுத்த நகையை சோதனை செய்துள்ளார். இந்த சோதனையில் கார்த்திக் ராஜா கொடுத்தது போலீ நகை என தெரிய வந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கார்த்திக் ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதால் அவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்க 19 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 80 சவரம் நகையை மோசடி செய்துள்ளது போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.