பாட்னா: பிஹார் மாநிலம் கயா விமானநிலையத்திற்கு வெளியாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில், 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹோட்டல் அறையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில் சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதன்படி, கடந்த சனிக்கிழமை முதல் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பிஹார் மாநிலம் கயா விமான நிலையத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் இந்தியா வந்த நான்கு வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மியான்மர், ஒருவர் தாய்லாந்து, மற்ற இருவர் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளனர். நால்வரும் போதி கயா செல்வதற்காக இந்தியா வந்துள்ளனர்.
இதுகுறித்து கயா மாவட்ட மருத்துவ அதிகாரி ராஜன் சிங் கூறுகையில், கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிரமான பாதிப்புகள் இல்லை. இருந்தாலும் தொற்று மேலும் பரவாமல் இருக்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்” என்றார்.
முன்னதாக, சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய ஆக்ராவைச் சேர்ந்த 40 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது சளி, ரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தீவிரமாக பரவி வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை ஒரு பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 196 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 3,428 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 4.46 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5 லட்சத்து 30 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ளனர்.