ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பரிசு தொகை மற்றும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு தமிழக மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. அதுபோல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புகள் குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியது.
அந்த அறிவிப்பில் அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 பணமும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக தெரிவித்து இருந்தது.
இத்தகைய நிலையில், இந்த பொங்கல் பரிசு தொகையை ரூ.2500 ஆக உயர்த்த கோரி விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும், பொங்கல் பரிசு தொகையில் கரும்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா ஜி.கே.வாசன், ஓபிஎஸ் மற்றும் விஜயகாந்த் போன்றோர் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இது பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.எனவே பொங்கல் பரிசு தொகையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தலைமை வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவகள் தெரிவிக்கின்றன.