சென்னை: மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் வரும் 27-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை செய்ய உள்ளதாக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.
சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாஜ்பாய் பிறந்த நாள்,நல்லாட்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசத்துக்கு வலிமையான அடித்தளமிட்டவர் வாஜ்பாய். அவர் வகுத்த பாதையில், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ஊழலற்ற ஆட்சி நடத்தியவர் வாஜ்பாய். இலவசக் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
ஆனால், தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்காக ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை தரமற்ற பொங்கல் பொருட்களை திமுக அரசு வழங்கியது. ஆனால், இந்த முறை கரும்புகூட இல்லாமல் பொங்கல் பரிசு வழங்குகின்றனர்.
முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த அளவுக்கு தமிழகத்தின் ஆட்சி நிலை இருக்கிறது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று, எங்கள் மாநிலத் தலைவர் கூறிவிட்டார். அதிமுகவில் என்ன பிரச்சினை இருந்தாலும், அவர்கள் எங்களது நண்பர்கள்.
கட்சியை பலப்படுத்துவதற்காக வரும் 27-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி, நீலகிரி, கோவையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.