வாடகை காரில் வழிமறித்து ரூ.68 லட்சம் அபேஸ்; நகைக்கடை ஊழியர்களிடம் கொள்ளையடித்த போலி ஐ.டி ஆபீசர்ஸ்!

ஆந்திர மாநிலம், குண்டூர், வங்காவாரி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (42). இவர், குண்டூர் பகுதியில் நகைக்கடை நடத்திவருகிறார். அதனால், தன்னுடைய கடைக்குத் தேவையான நகைகளை மொத்தமாக சென்னை சௌகார்பேட்டையில் வாங்குவதை விஸ்வநாதன் வழக்கமாக வைத்திருந்தார். நகைகளை வாங்க கடந்த 15-ம் தேதி கடையில் வேலைப்பார்க்கும் அலிகான், சுகானி ஆகியோரிடம் 68 லட்சம் ரூபாயை கொடுத்து தங்கநகைகளை வாங்க சென்னைக்கு பேருந்தில் அனுப்பி வைத்தார் விஸ்வநாதன். அதன்படி இருவரும் 16-ம் தேதி காலை 5:30 மணியளவில் சென்னைக்கு வந்தனர்.

பணம்

பின்னர் அவர்கள் இருவரும் கொடுங்கையூர், காந்தி தெருவில் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஒரு கும்பல், அலிகான், சுகானி ஆகியோர் சென்ற ஆட்டோவை வழிமறித்தது. காரைவிட்டு இறங்கிய அந்தக் கும்பல், அலிகானிடமும் சுகானிடமும் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அலிகான் வைத்திருந்த பேக்கை திறந்து காண்பிக்கும்படி அந்தக் கும்பல் சொன்னது. அதன்படி அலிகானும் பேக்கை திறந்து காண்பித்திருக்கிறார். அதற்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது.

பின்னர் பணத்துக்கான ஆவணங்களை அலிகானிடம் அந்தக் கும்பல் கேட்டது. அதற்கு அவர், நகைகளை வாங்க ஓனர் கொடுத்து அனுப்பினார் என்று பதிலளித்தார். அதனால், அலிகானை மட்டும் காரில் ஏற்றிக் கொண்டு மஞ்சம்பாக்கம் ரவுன்டனாவுக்கு அழைத்துச் சென்ற அந்தக் கும்பல், இந்தப் பணத்துக்கான ஆவணங்களை வருமானவரித்துறை அலுவலகத்தில் காண்பித்து திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி கூறிவிட்டு அவரை காரைவிட்டு இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதையடுத்து அலிகான், பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறித்துச் சென்ற தகவலை ஓனர் விஸ்வநாதனுக்கு தெரிவித்தார்.

கைது

உடனடியாக அவர், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல்கள், வாகனத்தின் பதிவு நம்பர் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரித்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்துலு வெங்கட நரசிம்மராவ் (31) என்பவர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்து அவரிடமிருந்து ஏழு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “புகார் கொடுத்த விஸ்வநாதன், தன்னுடைய ஊழியர்களை சென்னைக்கு அனுப்பி தங்க நகைகளை வாங்குவதை தெரிந்துக் கொண்ட பக்தலு வெங்கட நரசிம்மராவ் மற்றும் அவரின் கூட்டாளிகள், ஐ.டி அதிகாரிகள் எனக் கூறி பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி அலிகானும் சுகானும் பணத்தை எடுத்துக் கொண்டு பேருந்தில் சென்றதால் ஹைதராபாத்திலிருந்து வாடகை கார் மூலம் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்தனர். சென்னையில் பேருந்தைவிட்டு கீழே இறங்கிய அலிகானும் சுகானும் ஆட்டோ மூலம் சௌகார்பேட்டைக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கொடுங்கையூர் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால் ஆட்டோவை பக்தலு வெங்கட நரசிம்மராவ் டீம் வழிமறித்தது. பின்னர் அலிகான், சுகானியிடம் ஐ.டி நிறுவன அதிகாரிகள் என மிரட்டி பணத்தை பறித்திருக்கிறது.

கைது

அலிகான் அளித்த தகவலின்படி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பக்தலு வெங்கட நரசிம்மராவை கைதுசெய்திருக்கிறோம். கொள்ளையடித்த பணத்தில் ஏழு லட்சம் ரூபாயை பக்தலு வெங்கட நரசிம்மராவுக்கு அந்தக் கும்பல் கொடுத்திருக்கிறது. மீதமுள்ள பணத்தோடு அந்தக் கும்பல் தப்பிச் சென்றிருக்கிறது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் பக்தலு வெங்கட நரசிம்மராவ், வாடகைக்கு காரை ஏற்பாடு செய்திருக்கிறார். அதனால் அவருக்கு இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் திட்டம் குறித்த தகவல்கள் தெரியவில்லை. மீதமுள்ளவர்கள் சிக்கினால் மட்டுமே கொள்ளைச் சம்பவம் குறித்த முழுவிவரம் தெரியவரும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.