விபத்தில் சிக்கிய ராதாகிருஷ்ணன்: காரிலிருந்து இறங்கி செய்த தரமான சம்பவம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது. காரின் முன் பகுதி சேதமான நிலையில் நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார்.

தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளராக பணியாற்றி வருகிரார் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 26) காலை சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக தமது இனோவா காரில் சென்று கொண்டிருந்தார்.

பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில் சென்றபோது சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் சுற்றுலா வாகனம் தவறுதலாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ராதாகிருஷ்ணன் பயணித்து வந்த காரின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. சுற்றுலா வாகனம் சாலையின் வளைவில் தவறாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டதும் காரிலிருந்து இறங்கி வந்த ராதாகிருஷ்ணன், தனது காரையும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் உடனடியாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாமதிக்காமல் அவரே போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே காவல் நிலையம் இருந்துகூட உடனடியாக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அங்கு வரவில்லை என்று சம்பவ இடத்திலிருந்த மக்கள் கூறுகின்றனர்.

போக்குவரத்து நெரிசலை சரிசெய்த பின்னர் ராதாகிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டு பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.