சென்னை: தமிழகத்தில் 4,517 நியாயவிலை கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டுறவு, உணவுத் துறை சார்பில்தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் செயல்படுகின்றன. இதுதவிர, இரு துறைகள் சார்பிலும் உணவுப் பொருள் கிடங்குகளும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.
மக்கள் எளிதாக நியாயவிலை கடையை அணுகும் வகையிலும், கிடங்குகளில் பொருட்களை சரியான முறையில் பாதுகாக்கவும் கடைகளை புதுப்பித்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இத்துறைகள் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கோபாலபுரத்தில் உள்ள உணவுப் பொருள் விநியோகத் துறை மண்டலஅலுவலகம் மற்றும் கிடங்கை ஆய்வுசெய்தார். அலுவலகம் மற்றும்கிடங்குகள் புதுப்பிக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டார்.
தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை, அண்ணா நகரிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடையையும் பார்வையிட்டார்.
இதுகுறித்து ஜெ. ராதாகிருஷ்ணன் கூறும்போது, “இதுவரை 4,517 நியாயவிலை கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளன. மேலும், 2,800நியாயவிலை கடைகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. பொதுமக்கள் எளிதில்அணுகும் வகையில் அந்த கடைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முழுநேர கடைகள், 10 ஆயிரத்து்க்கும் மேற்பட்ட பகுதிநேர கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளையும் சீரமைக்க அவகாசம் தேவைப்படும்” என்றார்.