547 வீடுகளுக்கான முன்பதிவு தொடக்கம்: சொகுசு கப்பலில் குடியேறுகிறார் அமெரிக்க இளைஞர்

வாஷிங்டன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிஸ்டர் புன்டன், ஷானோன் லீ ஆகியோர் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு ஸ்டோரிலைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் எம்.வி.நேரேட்டிவ் என்ற சொகுசு கப்பலை தயாரித்து வருகிறது. குரேஷியா நாட்டில் வடிவமைக்கப்படும் சொகுசு கப்பல் 741 அடி நீளம், 98 அடி அகலம், 18 மாடிகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இதில் 547 வீடுகள் அமைக்கப்படுகின்றன.

அதோடு பள்ளி, கல்லூரி, ஆன்லைன் கல்வி வசதி, மருத்துவமனை, வங்கி, சந்தை, திரையரங்கம், நூலகம், ஓட்டல், உடற்பயிற்சி கூடம், யோகா கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கப்பலில் உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் மிதக்கும் நகரமாக சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

வரும் 2025-ம் ஆண்டில் இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்க இருக்கிறது. உலகின் எந்த பகுதியில் சீரான வானிலை நிலவுகிறதோ அந்த பகுதியை நோக்கி கப்பல் பயணம் செய்யும்.

சொகுசு கப்பலில் 4 படுக்கை அறை வசதி, 2 படுக்கை அறை வசதி உட்பட 11 வகையான வீடுகள்அமைந்துள்ளன. இவை 12 ஆண்டு,24 ஆண்டு, 60 ஆண்டு குத்தகைக்குவிடப்படுகிறது. இப்போதே முன்பதிவு குவிந்து வருகிறது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் பணியாற்றும் வெல்ஸ் (28) என்பவர் எம்.வி. நேரேட்டிவ் சொகுசு கப்பலில் ரூ.2.48 கோடியில் 12 ஆண்டு குத்தகைக்கு 237 சதுர அடி வீட்டை முன்பதிவு செய்துள்ளார். இந்த வீட்டில் சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன.

இதுகுறித்து வெல்ஸ் கூறும்போது, “அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் வசிக்கிறேன். வீடு,அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதில் சுவாரசியம் இல்லை.எனவே சொகுசு கப்பலில் குத்தகைக்கு வீடு எடுத்திருக்கிறேன். இதன்மூலம் உலகம் முழுவதும் சுற்றி வருவேன். கப்பலில் கடல் அழகை ரசித்துக் கொண்டே பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.

சொகுசு கப்பல் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இயற்கை எரிவாயு மூலம் கப்பல் இயக்கப்பட உள்ளது. 6 கண்டங்களுக்கு எங்களது கப்பல் செல்லும். ஒரு துறைமுகத்தில் 5 நாட்கள் வரை முகாமிடுவோம். சூரிய வெளிச்சம் எந்த பகுதியில் இருக்கிறதோ, அந்த திசை நோக்கி கப்பல் செல்லும். ஆண்டு முழுவதும் கப்பல் இயங்கிக் கொண்டே இருக்கும். கப்பலில் ஏதாவது பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.

மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் கப்பலில் இருக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். கப்பலில் உள்ள வீடுகள் ரூ.8.28 கோடி முதல் ரூ.66.23 கோடி வரைகுத்தகைக்கு விடப்படும். எங்களுடைய மிதக்கும் நகரத்தில் வீடுகளை முன்பதிவு செய்து மனைவி, பிள்ளைகளுடன் குடியேறலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.