சென்னை :: 2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ம் தேதி தொடங்க உள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகளில் அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “2023 ஜனவரி 9ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையின் மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையுடன் தமிழக சட்டப்பேரவை தொடங்க உள்ளது. அன்றைய தினம் மறைந்த தலைவர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் செய்தி வாசித்த பிறகு மௌன அஞ்சலி செலுத்தப்படும். இதனை அடுத்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.
இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் விவாதித்து அன்றைய தினமே முடிவு செய்யப்படும். மீண்டும் தமிழக சட்டப்பேரவை மறுநாள் (ஜன.10) காலை 10 மணிக்கு கூடி தொடர்ந்து நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.