தமிழ் திரையுலகில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு நடிகர்களும் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்து வருகின்றனர் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 15 வருட காலமாக இந்த இரண்டு நடிகர்களும் பாக்ஸ் ஆபிசில் ராஜ்ஜியம் செய்து வருகின்றனர். இந்த இரண்டு பெரிய நடிகர்களுக்கும் உள்ள ரசிகர்கள் கூட்டத்தை கைவிட்டு எண்ண முடியாது, அந்தளவிற்கு இவர்களுக்கு ரசிகர்களிடையே மாபெரும் செல்வாக்கு உள்ளது. கிட்டத்தட்ட எட்டு வருட காலங்களுக்கு பின்னர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படமும், அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படமும் பொங்கல் பண்டிகை சமயத்தில் ஒன்றாக மோதவிருக்கிறது. இந்த இரண்டு படங்களின் மோதலில் எந்த படம் வெற்றிக்கொடி நாட்டப்போகிறது என்பதை காண விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பல ரசிகர்களும் காத்துக்கிடக்கின்றனர்.
‘வாரிசு’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘தளபதி 67’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதேபோல ‘துணிவு’ படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித்தும் ‘ஏகே62’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் அஜித்தின் ‘ஏகே62’ படத்தில் நடிக்க த்ரிஷாவை படக்குழு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் த்ரிஷா நடித்தால் இது அஜித்துடன் இணைந்து அவர் நடிக்கும் ஐந்தாவது படமாக அமையும், இதற்கு முன்னர் கிரீடம், ஜி, மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் போன்ற படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.
மறுபுறம் விஜய்யின் தளபதி 67 படத்திலும் திரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது, விஜய்-த்ரிஷா காம்போ பலருக்கும் பிடித்த ஒன்று. இதற்கு முன்னர் திரிஷா, விஜய்யுடன் சேர்ந்து கில்லி, குருவி, திருப்பாச்சி மற்றும் ஆதி போன்ற படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன், திரிஷா இணையப்போவதாக கூறப்படுகிறது. தளபதி 67 மற்றும் ஏகே62 ஆகிய படங்களில் த்ரிஷா நடிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த இரண்டு படத்திற்கும் அனிரூத் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.