சென்னை: 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி என்றாலே மனதில் ஏற்படும் துக்கமும் பெருமூச்சும் ஆழிப்பேரலை ஏற்படுத்திச் சென்ற மங்கா வடுக்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 14 நாடுகளில் சுனாமி என்ற ஆழிப்பேரலை சீறிப் பாய்ந்தது. கடல்களின் கரையோரம் வசித்த மக்கள் ஏறத்தாழ சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். இந்தோனேஷியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா என 14 நாடுகள் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் திக்குமுக்காடின.
ஆறாக்காயம் ஏற்படுத்திய கண்ணீர் அலையின் 18ம் ஆண்டு நினைவு இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. அதிலும், குறிப்பாக, கடற்கரையோர நகரங்களிலும், பாதிக்கப்பட்ட நகரங்களிலும், இந்த சுனாமியால் உறவுகளை, வீடு வாசலை இழந்த மக்களால் துயரத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தியும், கடற்கரையில் பால் ஊற்றியும் மீனவர்கள் தங்கள் சோகத்தை ஆற்றிக் கொள்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலையால் சதுரங்கபட்டினம் பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
சுனாமி பேரலையில் உறவுகளை இழந்த மீனவர்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஊர்வலமாக வந்து சுனாமி நினைவுதூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மீனவர்கள், கடலுக்கு சென்று இறந்தவர்களுக்கு பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.மேலும் சுனாமி தினத்தை கருப்பு தினமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல, சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி, ஆயிரம் பேரை அடக்கம் செய்த சுனாமி ஸ்தூபில் மும்மதத்தை சேர்ந்தவர்களும் சிறப்பு பிரார்த்தனை செய்தபோது, சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டிணம் மாவட்டத்தில் பொதுமக்கள் 6065பேர் உயிரிழக்க காரணமான சுனாமி, 2004ஆம் ஆண்டில், இதேநாள் காலை 8.35மணியளவில் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கன்னி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி இன்று காலை நடைபெற்றது.
வேளாங்கன்னியில் சுனாமியால் உயிரிழந்த 1000த்திற்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த வேளாங்கண்ணி ஆர்ச்யில் உள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதிப் அமைதிப் பேரணியாக அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர். சுனாமி ஏற்பட்டு 17 ஆண்டுகள் கடந்து போனாலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து இருந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் கதறி கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தியும் மாலைகளை வைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆற்காட்டு துறையில் 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆறுகாட்டுத்துறை சுனாமி நினைவிடத்தில், முன்னாள் அமைச்சர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் கடல் அன்னைக்கு பால் ஊற்றி மற்றும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினார்.