அக்குரணை நகருக்கான நீர் மற்றும் மின்விநியோகம் வழமை நிலைக்கு திருப்பியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பிரதான மின்விநியோகக் கம்பம் சரிந்து வீழ்ந்து, நீர்விநியோகக் குழாய் வெடித்திருந்ததால், அக்குரணை நகரின் பல இடங்களில் நீர் மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. திருத்தப் பணிகள் பூர்த்தியாகி, விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சேறு படிந்த வீதிகளையும், கட்டடங்களையும் சுத்தப்படுத்தி வருவதாக அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் திரு.இஸ்திஹார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிங்கா-ஓயா பெருக்கெடுத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்குரணை நகரில், வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் 200 கோடி ரூபாவைத் தாண்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அக்குரணை வர்த்தக சங்கம் மதிப்பீட்டை மேற்கொண்டிருப்பதாக அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார். எதிர்காலத்தில் கண்டி மாவட்ட செயலகம் ஊடாகவும் மதிப்பீட்டை மேற்கொண்டு, உரிய இழப்பீடுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திரு.இஸ்திஹார் குறிப்பிட்டுள்ளார்.