கீவ்: ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார்.
அப்போது தனது அமைதி திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மோடி ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை வைத்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய 22,500 இந்திய மாணவர்களின் கல்வியை எளிதாக்குவதற்கு உதவுமாறும் ஜெலன்ஸ்கியிடம் மோடி கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதற்கு இந்திய பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன். அமைதியை செயல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் நம்புகிறேன். ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டார். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜெலன்ஸ்கி சந்தித்தார். இந்தச் சந்திப்பை ரஷ்ய அதிபர் புதின் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் காரணம்: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை திடீரென அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.