சிவகங்கை: இன்னும் 6 மாதங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தி சுங்கச்சாவடிகளில் வாகன வசூல் செய்யப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். ஒன்றிய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படுவது குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் விகே.சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்த விவரங்கள் ஒன்றிய அரசிடம் தெரிவிக்கப்படும். இன்னும் 6 மாதத்தில் சுங்கச்சாவடிகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் வாகன எண்கள் கண்டறியப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். வாகனங்களின் எண்கள் 6 மாதங்கள் கண்காணிக்கப்படும். அதன்பின் அடிக்கடி வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் குறைக்கப்படும். இனி வாகனங்கள் செல்வதில் தாமதம், தடை ஏற்படாது. வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாடாளுமன்ற பாஜ தொகுதி பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்’’ என்றார்.
